உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

சாலை விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு பொன்மொழிகளை அனுப்ப கலெக்டர் வேண்டுகோள்

Published On 2023-09-27 04:55 GMT   |   Update On 2023-09-27 04:56 GMT
  • தேனி மாவட்டம் மக்களுக்கு சாலை விபத்துகள் குறித்து "விழிப்புணர்வு பொன்மொழி" எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது
  • இப்போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள் அடுத்த மாதம் 31-ந் தேதியாகும்.

தேனி:

இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 1130 சாலை விபத்துகள் நடக்கின்றது. அதில் சுமார் 422 நபர்கள் உயிரிழக்கின்றனர். சாலை விபத்து உயிரிழப்புகள் அதிக வேகமாக வாகனத்தை ஓட்டுதல், செல்போனில் பேசியபடி ஓட்டுதல், மது அருந்தி ஓட்டுதல், தலைக்கவசம் இன்றி ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல், சாலை விதிகளை மதிக்காமல் ஓட்டுதல் போன்ற பல்வேறு காரணங்களினால் ஏற்படுகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் போலீசாரின் பரிந்துரையின்படி 4,328 நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் அதிக வேகமாக ஓட்டியவர்கள் 211, அதிக பாரம் ஏற்றி ஓட்டியவர்கள் 151, செல்போன் பேசி ஓட்டியவர்கள் 287, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி ஓட்டியவர்கள் 185, மது அருந்தி ஓட்டியவர்கள் 58, சிவப்பு விளக்கை மதிக்காமல் ஓட்டியவர்கள் 3228 மற்றும் விபத்தினால் மரணத்தை ஏற்படுத்தியவர்கள் 208 பேர் ஆவார்கள்.

எனவே, தேனி மாவட்ட மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அதிக வேகமாக வாகன ஓட்டுதலை தடை செய்வது குறித்து "விழிப்புணர்வு பொன்மொழி" எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பங்கு பெறலாம்.

2 வரிகளில் மிகவும் சுருக்கமாகவும், கருத்து மிகுந்ததாகவும் உள்ள பொன்மொழிகள் அனைத்தும் தேர்வு செய்யப்பட்டு, அப்பொன்மொழிகளை எழுதியவர்களுக்கு மாவட்ட கலெக்டரால் பரிசு வழங்கப்படும். போட்டியில் பங்கு பெறுவோர் அவர்களுடைய முழு முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் எழுதி அனுப்ப வேண்டும்.

இப்போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள் அடுத்த மாதம் 31-ந் தேதியாகும்.

விழிப்புணர்வு பொன்மொழியினை தபால் அட்டை அல்லது தபால் கவரில் எழுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News