வீடுகள் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் ஏ.சி.எந்திரங்கள் சேதம்
- எந்த பிராண்ட் ஏ.சி. வாங்கினாலும் அவை ஒரு வருடம் கூட முழுமையாக நீடிப்பதில்லை.
- கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை:
வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகமாகி வருவதால் வீடுகளில் ஏ.சி.யை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கழிவுநீர் தேங்கி நிற்கும் நீர்நிலைகள் அல்லது கழிவுநீர் உந்து நிலையம் அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் ஏ.சி. எந்திரங்கள் கழிவுநீரில் இருந்து வெளியேறும் நீராவி மற்றும் வாயுக்களால் பாதிக்கப்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இவை வீட்டில் இருக்கும் மின் சாதனங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏ.சி. எந்திரங்களில் உள்ள செம்பு கம்பிகளை அதிகமாக பாதிக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக ஏ.சி. எந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு அதை சரி செய்ய ஒரு தொகையை செலவு செய்யும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அண்ணாநகரில் வசிக்கும் சந்தியா என்பவர் கூறும் போது, நாங்கள் சமீபத்தில் ஸ்பிலிட் ஏ.சி.யை வாங்கினோம். 15 நாட்களுக்குப் பிறகு அதில் பழுது ஏற்பட்டது. ஏ.சி. மெக்கானிக்கை வர வழைத்து பழுது பார்க்கையில் அவர் செப்புச் சுருள் மெலிந்ததால் வாயு கசிவு ஏற்பட்டதை கண்டறிந்தார். அதனை சரிசெய்த பின்னர் மீண்டும் மீண்டும் இதே மாதிரி பழுது ஏற்பட்டது. அப்போதும் செப்பு கம்பியை மாற்றினோம். இதற்குக் காரணம் என்ன என்று கேட்டபோது நாங்கள் வசிக்கும் இடம் அருகில் கழிவுநீர் அதிகம் நிறைந்த ஓட்டேரி நீரோடை மற்றும் மாசுபட்ட நீரிலிருந்து வரும் நச்சுபுகைகள் ஏசி எந்திரத்தில் உள்ள செப்பு பாதிப்பதாக என்ஜினியர்கள் தெரிவித்தனர். அருகில் குடியிருப்பவர்கள் பலருக்கும் இதே நிலை தான் என்று கூறினார்.
மேலும் அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறும்போது, எந்த பிராண்ட் ஏ.சி. வாங்கினாலும் அவை ஒரு வருடம் கூட முழுமையாக நீடிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் பழுதை சரி செய்யும் பொழுது ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது. ரூ.50 ஆயிரம் கொடுத்து 6 மாதத்திற்கு முன்பு ஒரு ஏ சி. வாங்கினேன். அது ஒரே மாதத்தில் பழுதாகிவிட்டது என்றார்.
மேலும் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் பெரம்பூர் மற்றும் கொரட்டூர் பகுதி களில் குடியிருப்பவர்கள் அருகில் இருக்கும் கழிவு நீர் உந்து நிலையத்தில் இருந்து வெளிவரும் வாயுக்களால் ஏ.சி. எந்திரங்களில் பழுது ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இதற்காக நாங்கள் நிறைய பணம் செலவழிக்கிறோம் என்று அவர்கள் வேதனையுடன் கூறினார்கள்.
இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி.யின் ஓய்வு பெற்ற வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் டி. சுவாமிநாதன் கூறியதாவது:-
தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து ஹைட்ரஜன் சல்பைட் வாயு வெளியேகிறது. இது அழுகிய முட்டையை போன்ற துர்நாற்றத்தை வீசும். இது கந்தகமாகவோ அல்லது கந்தக அமிலமாகவோ மாறக்கூடும். இவை ஏ.சி.யின் செப்புப் பகுதிகளுடன் வினைபுரிந்து, அதை அரித்து வாயு கசிவை ஏற்படுத்துகிறது.
மற்ற மின் சாதனங்களில் ஏ.சி.யை போல அதிக செப்பு பாகங்கள் இல்லை, அதனால்தான் டி.வி. போன்ற பிற மின் சாதனங்களை விட ஏ.சி. எந்திரங்கள் மட்டுமே அடிக்கடி சேதமடைகின்றன என்றார்.