தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை- அரசாணை வெளியீடு
- செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்க பெற்றோர், மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
- விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கப்படும்.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். மேலும் பல்வேறு ஊர்களில் உள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க் கிழமை அவர்கள் அனைவரும் சென்னை உள்பட பணி செய்யும் இடங்களுக்கு திரும்ப வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக நாளை இரவே அவர்கள் புறப்பட வேண்டும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோரும் மாணவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாளான 25-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.