ரெட்டேரியை தூர்வாரும் பணி இம்மாத இறுதியில் தொடக்கம்: 18 மாதங்களில் முடிக்க திட்டம்
- ரெட்டேரியின் கொள்ளளவை அதிகரிக்க நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.
- கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் ஏரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.
சென்னை:
சென்னை மக்களின் குடிநீர் தேவை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை போன்ற ஏரிகள் மூலம் பூர்த்தி செய்யப் படுகிறது.
சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் தேவையை சமாளிக்கும் வகையில் நீர்நிலை தேக்கத்தை அதிகப்படுத்த நீர்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரெட்டேரியின் கொள்ளளவை அதிகரிக்க நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.
ரெட்டேரியில் தூர்வாரி வண்டல் மண்ணை அகற்றி நீர்தேக்க அளவை 32 மில்லியன் கன அடியில் இருந்து 45.13 மில்லியன் கன அடியாக அதிகரிக்கும் பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை டெண்டர் கோர முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.43.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நீர்வளத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ரெட்டேரியில் இருந்து சுமார் 7 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் அகற்றப்பட உள்ளது. ஏரிக்கரையில் உள்ள வண்டல் மண்ணை அகற்றிய பிறகு அங்கு பறவைகள் வந்து செல்ல 3 தீவுகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம்.
சென்னையில் அதிகரிக்கும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நீர்தேக்கங்களை அதிகரிக்க சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அதன்படி ரெட்டேரி, பெரும்பாக்கம், முடிச்சூர், செம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், அயனம்பாக்கம், கொளத்தூர், போரூர் மற்றும் புழல் ஆகிய பகுதிகளில் உள்ள 10 ஏரிகளை ரூ.100 கோடி புணரமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இன்னும் சில நாட்களில் டெண்டர் பணிகள் முடி வடைந்து இந்த மாத இறு திக்குள் பணிகள் தொடங் கப்பட உள்ளது. 18 மாதங்க ளுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளோம். ஏரிக்கரை பகுதி யில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது.
இப்பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் ஏரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பூண்டி, புழல் செம்பரம் பாக்கம், சோழவரம், தேர்வாய் கண்டிகை ஏரிகளில் மொத்தம் 13.213 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க முடியும். சென்னை யின் குடிநீர் மற்றும் தொழில் துறை தேவைகளை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு 22 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் இது அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் 32 டி.எம்.சி. ஆக அதிகரிக்கும் என்று அரசு கணித்துள்ளது குறிப் பிடத்தக்கது.