உள்ளூர் செய்திகள்

பருவமழை பொய்த்ததால் வறண்ட இலத்தூர் குளம் தற்போது ஆடுகள் மேய்ச்சல் இடமாக மாறிய காட்சி.

செங்கோட்டை பகுதியில் பருவமழை பொய்த்ததால் வறண்ட குளங்கள்-விவசாயிகள் வேதனை

Published On 2023-08-25 08:44 GMT   |   Update On 2023-08-25 08:48 GMT
  • செங்கோட்டை பகுதியில் விளையும் காய்கறிகளை உள்ளூர் மட்டுமின்றி கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
  • தென்மேற்கு பருவமழையானது ஆரம்பத்தில் பெய்த நிலையில் பின்னர் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது.

செங்கோட்டை:

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான செங்கோட்டை சுற்றுவட்டப் பகுதி பூ மகசூலுக்கு சிறப்பு பெற்றதாகும்.

உளுந்து, சோளம், கம்பு

இப்பகுதி விவசாயிகள் கார் மற்றும் பிசான சாகுபடி காலங்களில் நெல் மற்றும் தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டப்பயிர்களும், ஏனைய காலங்களில் உளுந்து, சோளம், கம்பு மற்றும் தோட்ட பயிரான கத்தரி, வெண்டை, புடலங்காய், மிளகாய், தக்காளி உள்ளிட்ட கோடை கால பயிர்கள், நெல்லி, புளி உள்ளிட்ட வறட்சியை தாங்கும் பயிர்கள் என பயிரிடுவார்கள்.

இப்பகுதியில் விளையும் காய்கறிகளை உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். மேலும் கேரளாவில் கொண்டாப்படும் ஓணம் பண்டிகை காலத்தில் அங்கு காய்கறிகள் விலை அதிகரிப்பதால் அதனை கணக்கில் கொண்டு செங்கோட்டை பகுதி விவசாயிகள் தங்களின் விளைச்சலை பெருக்குவர். இதனால் வர்த்தக அதிகளவில் இப்பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெருமளவில் பயன்பெற்றனர்.

தென்மேற்கு பருவமழை

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையானது ஆரம்பத்தில் பெய்த நிலையில் பின்னர் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது.

மழை பொய்த்ததால் மோட்டை, அடவிநயினார் அணை உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது தண்ணீரின் அளவு குறைந்து காணப்படுகிறது.

இதனால் செங் கோட்டை பகுதியில் குறைந்த அளவிலான விவசாயிகளே பயிரிட்டுள்ளனர். காய்கறிகள் விளைச்சல் குறைந்ததால் அவற்றின் விலையும் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.

விவசாயிகள் வேதனை

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் தற்போது வரை பருவமழை பெய்யாததால் செங்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் வெறும் புல் தரையாக காட்சி அளிக்கிறது. இதனால் அவை ஆடு, மாடுகளை மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

இதே நிலை நீடித்தால் தங்களின் வாழ்வாதாரம் பெரும் பின்னடைவை சந்திக்கும் என செங்கோட்டை பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News