உள்ளூர் செய்திகள்

போலிசாரின் தொடர் விழிப்புணர்வால் தொப்பூர் பகுதியில் இதுவரை 13 துப்பாக்கிகள் பறிமுதல்

Published On 2022-10-21 09:37 GMT   |   Update On 2022-10-21 09:37 GMT
  • நாட்டுத்துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என போலிசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • இதுவரை 13 நாட்டு துப்பாக்கிகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டத்தில் எஸ்.பி. கலைச்செல்வன் உத்தரவின்பேரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் மலை அடிவார கிராமங்களில் உள்ளவர்கள் அனுமதி இல்லாமல் வைத்துள்ள நாட்டுத்துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என போலிசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனையடுத்து தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாளையம்புதூர் கோம்பை அருகே பொடாரிக்காடு என்ற வனபகுதி அருகே 3 நாட்டுத்துப்பாக்கிகளை மர்ம நபர்கள் வீசிச்சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் வாசன், சுப்பிரமணி மற்றும் வைகுந்தன் உள்ளிட்டோர் பாளையம்புதூர் கோம்பை அருகே உள்ள பொடாரிக்காடு வன பகுதிக்கு நேரில் சென்று 3 நாட்டு துப்பாக்கிகளையும் கைப்பற்றினர்.

தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதிகள் மற்றும் மலை அடிவாரப் பகுதிகளில் தொப்பூர் போலீசார் தொடர்ந்து அனுமதி இல்லாமல் யாராவது நாட்டுதுப்பாக்கிகளை வைத்திருந்தால் தாமாக முன்வந்து ஒப்படைத்து விடுங்கள். அவ்வாறு ஒப்படைக்காத பட்சத்தில் காவல்துறையினர் சோதனை செய்து கைப்பற்றும் பொழுது ஆயுததடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவீர்கள் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இதன் பலனாக தொப்பூர் காவல் நிலைய எல்லை பகுதியில் மட்டும் இதுவரை 13 நாட்டு துப்பாக்கிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் கேட்பாரற்ற நிலையில் போலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்த தொடர் விழிப்புணர்வின் மூலம் தொப்பூர் காவல் நிலைய எல்லை பகுதி முழுவதும் கள்ளத்தனமாக வைத்துள்ள நாட்டு துப்பாக்கிகள் முழுமையாக கைப்பற்றப்படும் எனவும் தொப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News