உள்ளூர் செய்திகள்

முட்டை விற்பனை அதிகரிப்பால் விலை ரூ.5.45 காசுகளாக உயர்வு

Published On 2024-06-12 04:06 GMT   |   Update On 2024-06-12 04:06 GMT
  • முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி.
  • கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.

சேலம்:

நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை ஆகிய பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 5 கோடிக்கும் அதிகமாக முட்டை உற்பத்தி நடைபெறுகிறது.

இந்த முட்டைகள் தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கும், தமிழகத்தின் பிற மாவட்டடங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தினசரி பண்ணைகளில் ரெக்க விற்பனைக்கு முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதனை பண்ணயைாளர்கள் கடை பிடித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி 460 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து நேற்றுகாலை 540 காசுகளாக இருந்தது . இதற்கிடையே நேற்று நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.

இதையடுத்து 540 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை 5 காசுகள் உயர்த்தி 545 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு , சென்னை 600 காசுகள் , ஐதராபாத் 520, விஜயவாடா 520, பர்வாலா 463, மும்பை 575, மைசூரு 545, பெங்களூரு 585, கொல்கத்தா 540, டெல்லி 500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து கோழிப்பண்ணை யாளர்கள் கூறியதாவது-

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் குளிர்ந்த சீேதாஷ்ன நிலை நிலவி வருகிறது.

இதனால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் கர்நாடகா , மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் முட்டையின் விலை உயர்ந்துள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாமக்கல்லில் நேற்று முட்டை கோழி பண்ணை யாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது . இதில் ஒரு கிலோ 92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை கோழி விலையை 5 ரூபாய் உயர்த்தி 97 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் 138 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.

Tags:    

Similar News