உள்ளூர் செய்திகள்

பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டது- பயணிகள் அவதி

Published On 2023-06-11 05:58 GMT   |   Update On 2023-06-11 05:58 GMT
  • தடம் புரண்ட பெட்டியின் வலது பக்க பகுதி தண்டவாளத்தை விட்டு வெளியேறி காணப்பட்டது.
  • பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை:

ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் ரெயில்வே ஊழியர்கள் உஷாராக பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு பேசின்பிரிட்ஜ் யார்டுக்கு சென்றபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலையில் பயணிகளுடன் சென்ற மின்சார ரெயில் திடீரென தடம் புரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.30 மணி அளவில் திருவள்ளூர் நோக்கி மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. 9 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் கடைசி பெட்டி பெண்கள் பெட்டியாகும்.

அதற்கு முன்பு உள்ள ரெயில் பெட்டி பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே சென்றபோது திடீரென தடம் புரண்டது. அந்த ரெயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.

இதில் ரெயில் பெட்டி பலத்த சத்தத்துடன் குலுங்கியது. இதனால் உஷாரான என்ஜின் டிரைவர் சாதுர்யமாக ரெயிலை நிறுத்தினார். தடம் புரண்ட பெட்டியின் வலது பக்க பகுதி தண்டவாளத்தை விட்டு வெளியேறி காணப்பட்டது.

இதனால் பெட்டியின் இடது பகுதி தண்டவாளத்துக்கு நடுவே போய் நின்றது. இதனால் பெட்டியில் இருந்த பயணிகள் பதட்டம் அடைந்தனர். அவர்கள் ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்து விட்டதாக நினைத்து கூச்சல் போட்டனர். பின்னர் தடம் புரண்ட பெட்டியில் இருந்த அனைவரும் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினார்கள்.

தடம் புரண்ட ரெயில் நின்று கொண்டிருந்த தண்டவாளம் வழியாக மற்ற ரெயில்களும் வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் சிலர் தங்களிடம் இருந்த சிகப்பு கலர் கர்சிப், துப்பட்டா உள்ளிட்டவைகளை காட்டி மற்ற ரெயில்களை நிறுத்தினார்கள். இதனால் பெரும் விபத்தும் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று தடம் புரண்ட ரெயில் பெட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மின்சார ரெயில் தடம்புரண்டதால் சென்னை சென்ட்ரலில் இருந்து மின்சார ரெயில்கள் புறப்படுவதில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகி உள்ளது. இதனால் ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்தனர்.

Tags:    

Similar News