காட்டு யானை தாக்கி தொழிலாளி பலியான விவகாரத்தில் 2-வது நாளாக மக்கள் போராட்டம்
- பொதுமக்கள் நவ்ஷாத் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- காட்டு யானையை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சீ போர்த் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத்(வயது38). தொழிலாளி.
இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜமால்(28) என்பவரும் தனியார் எஸ்டேட் காபி தோட்ட பகுதியில் நடந்து வந்தனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை திடீரென 2 பேரையும் துரத்தியது. யானையிடம் இருந்து தப்பிக்க 2 பேரும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் யானை விடாமல் துரத்தி வந்து 2 பேரையும் தாக்கியது. இதில் நவ்ஷாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜமால் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் யானையை விரட்டி காயம் அடைந்த ஜமாலை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நவ்ஷாத் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார், வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தும் அவர்கள் எடுக்கவிடவில்லை. யானையை இந்த பகுதியை விட்டு விரட்ட வேண்டும், யானையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டம் விடிய, விடிய நீடித்தது.
தொடர்ந்து இன்று 2-வது நாளாக யானை தாக்கி இறந்த நவ்ஷாத்தின் உடலை எடுக்க விடாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் சுற்றி திரியும் யானையை உடனே பிடிக்க வேண்டும்.
இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே யானையை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கும்கிகள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு யானையின் நடமாடத்தை கண்காணித்து வருகின்றனர்.