உள்ளூர் செய்திகள்

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு அடுத்த மாதம் 10-ந்தேதி தொடங்க வாய்ப்பு

Published On 2022-08-27 01:53 GMT   |   Update On 2022-08-27 01:53 GMT
  • சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடந்து முடிந்தது.
  • முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் மாதம் 2-வது வாரத்துக்கு மேல் தொடங்கும்.

சென்னை :

தமிழகம் முழுவதும் உள்ள 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான கலந்தாய்வு கடந்த 20-ந்தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25-ந்தேதி (நேற்று முன்தினம்) முதல் பொது கலந்தாய்வு தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவு வெளியாகாததால், பொது கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

இந்த நிலையில் 'நீட்' தேர்வு முடிவு குறித்த அறிவிப்பை தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டு இருக்கிறது. அந்தவகையில் பார்க்கும்போது என்ஜினீயரிங் பொது கலந்தாய்வுக்கு இன்னும் 2 வாரம் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு மாணவ-மாணவிகள், பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி சொல்லும்போது, நீட் தேர்வு முடிவு வெளியான 2 நாட்களுக்கு பிறகு, என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி, என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து, 2 மாதத்துக்கு (நவம்பர் மாதம் 2-வது வாரம் வரை) தரவரிசை பட்டியலின் அடிப்படையில் மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு, விருப்ப இடங்களை தேர்வு செய்வது, தற்காலிக இடங்களை ஒதுக்குவது, அதை உறுதிசெய்த பின்னர், இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்குவது, கல்லூரிகளில் சேருவது என கலந்தாய்வு நடக்கிறது. அதையடுத்து, துணை கலந்தாய்வு நடத்தப்படும். அந்த வகையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் மாதம் 2-வது வாரத்துக்கு மேல் தொடங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Tags:    

Similar News