உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 3 மையங்களில் எழுத்து தேர்வு

Published On 2022-06-25 07:20 GMT   |   Update On 2022-06-25 07:20 GMT
  • ஈரோடு மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்துத்தேர்வுக்காக 3610 ஆண்கள், 815 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 428பேர் விண்ணப்பித்திருந்தனர்.
  • ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் கல்லூரி, கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் நந்தா என்ஜினீயரிங் கல்லூரி என 3 மையங்களில் எழுத்துத் தேர்வு நடந்தது. வேளாளர் கல்லூரியில் நடந்த எழுத்துத்தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு:

தமிழகம் முழுவதும் காவல்து றையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்துத்தேர்வுக்காக 3610 ஆண்கள், 815 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 428பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதுபோக காவல்துறையில் பணி புரியும் 447 ஆண் போலீசார், 108 பெண் போலீசார் என 607 பேரும் எழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று காலை நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் கல்லூரி, கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் நந்தா என்ஜினீயரிங் கல்லூரி என 3 மையங்களில் எழுத்துத் தேர்வு நடந்தது. வேளாளர் கல்லூரியில் நடந்த எழுத்துத்தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் வந்திருந்தார்.

இன்று காலை 4228 பேருக்கு பொதுத்தேர்வு நடந்தது. இதற்காக தேர்வு நடைபெறும் மையங்களில் காலை 8 மணி முதலே தேர்வர்கள் வர தொடங்கினர். தேர்வு மையத்திற்குள் செல்போன் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை மீறி ஒரு சிலர் செல்போன் கொண்டு வந்திருந்தனர். அதை பாதுகாப்பு பணியில் ஈடுப ட்டிருந்த போலீசார் வாங்கி வைத்துக்கொண்டனர். தேர்வு முடிந்ததும் செல்போன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தேர்வு எழுதுவோர் ஹால் டிக்கெட், ஆதார் கார்டு நகல் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. பலத்த சோதனைக்கு பிறகே தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வேளாளர் கல்லூரியில் பெண்கள் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு நிறைவடைந்தது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வுக்காக 16 இன்ஸ்பெக்டர்கள், 70 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு ஹாலில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 300 தேர்வர்களுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் என்ற அடிப்படையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். நாளை காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் இன்று மதியம் பொதுத்தமிழ் தேர்வு தொடங்கியது. இதில் 4,428 பேர், காவல் துறையில் பணியாற்றும் 607 போலீசாரும் பொதுத்தமிழ் தேர்வை எழுதினர். இதைத்தொடர்ந்து நாளை காலை காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டும் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

Tags:    

Similar News