உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வெளுத்து வாங்கும் மழை பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2023-10-16 05:26 GMT   |   Update On 2023-10-16 05:26 GMT
  • முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது.
  • லோயர் கேம்பம் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தற்போது 122.80 அடியாக உள்ளது.

நேற்று 1000 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1401 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1300 கன அடி நீர் திறக்கப்படுவதால் லோயர் கேம்பம் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 3182 மி.கன அடியாக உள்ளது.

தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் அணையின் நீர் மட்டம் 123 அடியை எட்ட உள்ளது. இம்மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கி விடும். இதனால் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் 2-ம் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று விவசாயிகள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 55.09 அடியாக உள்ளது. வரத்து 2042 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 2733 மி.கன அடி.

57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.95 அடியை எட்டியதால் அணையில் இருந்து நேற்று முதல் தேனி, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் 100 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 434.30 மி.கன அடியாக உள்ளது.

126 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 114.30 அடியாக உள்ளது. வரத்து 93 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 80.69 மி.கன அடி.

கன மழை காரணமாக கும்பக்கரை, சுருளி, அணைப்பிள்ளையார் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெரியாறு 17.4, தேக்கடி 2.4, உத்தமபாளையம் 0.8, சண்முகாநதி அணை 1, போடி 15.4, வைகை அணை 64, மஞ்சளாறு 15, சோத்துப்பாறை 95, பெரியகுளம் 90, வீரபாண்டி 4.8, அரண்மனைப்புதூர் 13.8, ஆண்டிபட்டி 31.6, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News