கண்டமங்கலம் நெடுஞ்சாலை அருகில் தலைவர்கள் சிலை அமைக்க கட்சிகளிடையே கடும் போட்டி: போலீஸ் குவிப்பு
- புதிதாக கட்டப்பட்ட பீடத்தில் 3 சிலைகளும் வைக்கும் பணி நேற்று நடந்தது.
- ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் அங்கு திரண்டனர்.
விழுப்புரம்:
புதுச்சேரி–விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலத்தில் காந்தி, அண்ணாதுரை மற்றும் அம்பேத்கர் சிலைகள் இருந்தது. விழுப்புரம்–-நாகப்பட்டிணம் நெடுஞ்சாலை பணி நடைபெறுவதால் சிலைகளை வேறு இடத்துக்கு மாற்றும் பணி நடந்தது.புதிதாக கட்டப்பட்ட பீடத்தில் 3 சிலைகளும் வைக்கும் பணி நேற்று நடந்தது. இந்த நிலையில் நேற்று காலை அங்கு திரண்ட பா.ஜ.க. வினர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்–க்கு சிலை அமைக்க இடம் பிடித்து தங்கள் கட்சிக்கொடியை நாட்டினர். அதேபோல் பா.ம.க. வினர் மறைந்த வன்னியர் சங்க தலைவர் குருவிற்கு சிலை வைக்க வேண்டும் என தங்கள் கட்சிக்கொடியை நாட்டினர். இந்த நிலையில் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர்கள் கண்ணன், ராமதாஸ் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க., வினர் அங்கு வந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரின் சிலை அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கணேசன், ஒன்றிய சேர்மன் ஆர்.எஸ் வாசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் டி.எ்ன்.ஏ., தமி்ன் மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் அங்கு திரண்டனர்.
அப்போது தி.மு.க., மற்றும் பா.ஜ.க, பா.ம.க. வினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பின ரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அசம்பா விதம் ஏற்படாமல் தடுக்க டி.எஸ்.பி. மித்திரன், இன்ஸ்பெக்டர்கள் ரத்தினசபாபதி, செல்வராஜி ஆகியோர் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், ஆர்.ஐ., சாந்தி, மாயாவதி ஆகியோர் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக தலை வர்கள் சிலை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்கள் கோரிக்கை குறித்து விழுப்புரம் ஆர்.டி.ஓ., விடம் மனு அளிக்கலாம். அனுமதி கிடைத்தால் மட்டுமே சிலை வைக்க இயலும் என தெரிவித்தனர். அரசியல் கட்சியினர் தலைவர்கள் சிலை அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள் அங்கு பேசி முடிவு மேற்கொள்ள லாம் என தெரிவித்தனர். தலைவர்கள் சிலை வைக்க இடம் பிடிப்பதில், கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.