பக்கிங்காம் கால்வாயில் கரையோரம் வசிக்கும் 1,200 குடும்பத்தினரை வெளியேற்ற திட்டம்
- முதல்கட்டமாக 2.7 கி.மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்.
- பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி அதன் கரைகளை விரிவாக்கம் செய்து அதன் கரையோரங்களை அழகுபடுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.
மாமல்லபுரம்:
அடையாறில் கூவம் ஆறு கலக்கும் முகத்துவார பகுதியில் இருந்து முட்டுக்காடு படகு இல்லம் வரை சுமார் 22 கி.மீட்டர் தூரத்துக்கு பக்கிங்காம் கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய் கரைகளை ஆக்கிரமித்து இரு புறமும் ஏராளமான வீடுகள், கட்டுமானங்கள் உள்ளன. இதனால் கால்வாயின் அகலம் சுருங்கி வந்தது. மழை, வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதி மன்றம் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற சம்பந்தப் பட்ட அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி அதன் கரைகளை விரிவாக்கம் செய்து அதன் கரையோரங்களை அழகுபடுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதில் நீர்வளத்துறை, வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து பக்கிங்காம் கால்வாயில் முதல்கட்டமாக 2.7 கி.மீட்டர் தூரத்துக்கு கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற உள்ளது.
கூவம் ஆற்றின் முகத்துவார பகுதியில் இருந்து ஆர்.கே.சாலை பாலம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட உள்ளது. இதனால் சுமார் 1,200 குடும்பத்தினர் வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து அவர்களுக்கு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் உள்ள முக்கிய நீர்வழிப் பாதையான பக்கிங்காம் கால்வாயை மீட்டு அதன் கட்டமைப்பை மேம்படுத்தி கரையோரங்களை அழகுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கால்வாயை பொழுது போக்கு இடமாக மாற்றவும் அரசு முடிவு செய்து இருக்கிறது.
இதைத்தொடர்ந்து பங்கிங்காம் கால்வாய் கரையோரத்தில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. முதல் கட்டமாக, கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து ஆர்.கே.சாலை பாலம் வரை 2.7 கி.மீ. தூரத்துக்கு மறு சீரமைக்கப்பட உள்ளது. இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் முக்கியமாக கால்வாயின் எல்லையை நிர்ணயிப்பதும், கரைகளை பலப்படுத்துவதும் ஆகும்.
இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள திரவியவதி நதியின் மறுசீரமைப்புத் திட்டம், ஒடிசாவில் உள்ள தாலடண்டா கால்வாய் மறு சீரமைப்பு மற்றும் குஜராத்தில் உள்ள சபர்மதி நதி முகப்பு மேம்பாடு போன்ற வெற்றிகரமான மறுசீரமைப்பு திட்டங்களை நீர்வளத்துறை யினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
அங்கு செயல்படுத்தப் பட்டதை போல் பங்கிங்காம் கால்வாயிலும் திட்டம் செயல்படுத்தப்படும். இதில் பல்வேறு உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கூடுதலாக, கால்வாய் பகுதியில் கழிவுநீர் வெளி யேறும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. பக்கிங்காம் கால்வாயில் உள்நாட்டு நீர்வழிப் பாதையை கடந்த 2016-ம் ஆண்டு இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் கைவிட்டது. பக்கிங்காம் கால்வாயின் மறுசீரமைப்பு, பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும். இதனால் நீரின் தரம் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றம் அடையும். மறுசீரமைப்பு திட்டம் இன்னும் திட்டமிடுதல் கட்டத்தில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.