உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் பலத்த காற்றினால் படகு கவிழ்ந்து மீனவர் பலி : ஒருவர் உயிர் தப்பினார்

Published On 2023-08-04 08:58 GMT   |   Update On 2023-08-04 08:58 GMT
  • மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, வழக்கத்தை விட வேகமாக காற்று வீசியது.
  • வீரமணி மட்டும் கடலில் தலைகுப்புற கிடந்த படகை பிடித்து உயிர் தப்பினார்.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு, மீனவ கிராமத்தைச் சேர்ந்த வீர பிரதாப் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே ஊரைச்சேர்ந்த சின்னையன் மகன் ஞானபிராகாசம் (வயது 33), வீரமணி (50) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்படிக்க சென்றனர். காரைக்கால் மேடு கடற்கரையிலிருந்து கிழக்கே 4 நாட்டிகள் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போ து, வழக்கத்தை விட வேகமாக காற்று வீசியது. இதன் காரணமாக படகை கரைக்கு திருப்பினர். அப்போது, பலத்த காற்று வீசியதால் படகு தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் இருவரும், கடலில் விழுந்து மாயமாகினர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, வீரமணி மட்டும் கடலில் தலைகுப்புற கிடந்த படகை பிடித்து உயிர் தப்பினார்.

பிறகு படகை நிமிர்த்தி சரி செய்து, ஞானபிராகாசத்தை தேடினார். தேடியும் கிடைக்காததால், கரை திரும்பிய மீனவர் வீரமணி, நடந்த சம்பவத்தை சக மீனவர்களிடம் கூறினார். மாயமான மீனவர் ஞானபிராகாசத்தை தேடும் பணியில் ஐந்துக்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, அன்று இரவு காரைக்கால் மேடு கடற்கரைக்கு 200 மீட்டர் தொலைவில் கடலில் மீனவர் ஞானபிராகாசம் மிதந்து கொண்டிருந்தார். சக மீனவர்கள் ஞானபிராகாசத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்வம காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News