ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் 10 சதவீதம் உயருகிறது
- தனியார் பஸ்களின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
- அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.
சென்னை :
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு மூலம் ஒரு காருக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயரும் என தெரிகிறது.
சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரணூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
இதன்மூலம் சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் செலவு ஏற்படும்.
இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனியார் பஸ்களின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
இந்த கட்டண உயர்வு குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றும், அதேவேளையில் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:-
தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சுங்கச்சாவடிகளில் 40 சதவீத கட்டணம் குறைக்கப்படும், 60 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள், நகர்ப்பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது சுங்கச்சாவடிகள் அனைத்தும் பணம் வசூலிக்கும் மையங்களாகவே செயல்பட்டு வருகின்றன. சாலைகளை சீரமைப்பது போன்ற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவது இல்லை. சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது வணிகர்கள், வாகன உரிமையாளர்களை மட்டுமல்லாமல் மக்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டால் மதுரவாயல் சுங்கச்சாவடியில் ஏப்ரல் 1-ந்தேதி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.