உள்ளூர் செய்திகள்

கண்ணாடி விரியன் பாம்பு இருந்ததாக கூறப்பட்ட டவுன் பஸ்சில் தீயணைப்பு மற்றும் பாம்பு பிடி வீரர்கள் சோதனை நடத்தியபோது எடுத்த படம்.

விழுப்புரம் டவுன் பஸ்சில் கண்ணாடி விரியன் பாம்பு: டிரைவர் உள்பட பயணிகள் அலறியடித்து ஓட்டம்

Published On 2023-05-07 07:37 GMT   |   Update On 2023-05-07 07:37 GMT
  • இன்று காலை 7.30 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து எழுசெம்பொன் கிராமத்திற்கு 7-ம் நம்பர் பஸ் புறப்படத் தயாராக இருந்தது.
  • மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் நகரில் திருச்சி நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் உள்ளது. புதுச்சேரி சாலையில் பழைய பஸ் நிலையம் உள்ளது. இந்த பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டாராத்தில் உள்ள பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து எழுசெம்பொன் கிராமத்திற்கு 7-ம் நம்பர் பஸ் புறப்படத் தயாராக இருந்தது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ்சினை இயக்க டிரைவர் கணபதி வந்து, அவரது இருக்கையில் அமர்ந்து பஸ்சை ஸ்டார்ட் செய்து இயக்கினார். அப்போது அவரது காலடியில் 10 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு படுத்து கிடந்ததை கண்டு அதிர்ந்தார்.

உடனடியாக பஸ்சை விட்டு இறங்கிய கணபதி, பஸ்சிலிருந்த பயணிகளையும் எச்சரித்து கீழே இறக்கினார். இதனால் பயணிகளும், பொதுமக்களும் அலறியடித்து ஓடினர். டிரைவர் கணபதி இது தொடர்பாக போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவர்கள் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் பாம்பு பிடி வீரர்களுடன் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த பஸ்சில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். டிரைவர் பார்த்ததாக கூறிய கண்ணாடி விரியன் பாம்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து பணிமனையில் இருந்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து பாம்பு இருந்ததாக கூறப்பட்ட பஸ்சினை பணிமனைக்கு எடுத்து சென்று பாம்பு பிடி வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

Similar News