விமானம் மூலம் சேலம் சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி
- ஸ்ரீ சவுடாம்பிகா தெருவில் கைத்தறி கூடத்தை பார்வையிடுகிறார்.
- பெரியார் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள சுமங்கலி திருமண மண்டபத்தில் அனைத்து இந்திய நெசவாளர்கள் நலச்சங்கம் சார்பில் சிறந்த நெசவாளர்களை கவுரவிக்கும் விழா இன்று மதியம் நடைபெறுகிறது.
இதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த நெசவாளர்களை கவுரவித்து பேசுகிறார். இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார்.
இதனை தொடர்ந்து வட பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
முன்னதாக மேச்சேரியில் தர்மபுரி மெயின்ரோட்டில் உள்ள ஸ்ரீ சவுடாம்பிகா தெருவில் கைத்தறி கூடத்தை பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சேலம் பெரியார் பல்கலைக் கழகம் வருகிறார். அங்கு அவர் இரவில் தங்குகிறார்.
தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழா நாளை (16-ந் தேதி) காலை 10.30 மணி அளவில் பெரியார் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடக்கிறது.
இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். அவருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொள்கிறார்.
விழாவில் முனைவர் பட்ட ஆய்வு நிறைவு செய்துள்ள 288 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் அறிவியல் நிறைஞர், முதுகலை, இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 107 மாணவர்களுக்கும் தங்க பதக்கத்துடன் சான்றிதழை விழா மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்குகிறார்.
2023-2024-ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் விழாவில் பட்டங்களை பெற உள்ளனர். பெரியார் பல்கலைக்கழக துறைகளில் முதுகலை பாடப்பிரிவில் முதலிடம் பிடித்த 32 மாணவர்களுக்கும், இளங்கலை பாடப் பிரிவில் 2 மாணவர்களுக்கும், இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுகலை பாடப்பிரிவில் 30 மாணவர்களுக்கும், இளங்கலை பாடப்பிரிவில் 43 மாணவர்களுக்கும் தங்கப் பதக்கத்துடன் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.
விழாவில் முதன்மை விருந்தினராக மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஸ்ரீராம் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார்.
சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 46 ஆயிரத்து 365 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழக துறைகளில் படித்த 1,018 மாணவர்களும், பெரியார் தொலைநிலை கல்வி நிறுவனங்களில் படித்த 1,077 மாணவர்களும் பட்டங்களை பெற உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) விஸ்வநாத மூர்த்தி, தேர்வாணையர் (பொறுப்பு) கதிரவன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர். கவர்னர் வருகை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.