உள்ளூர் செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி கைத்தறி-கைவினைப்பொருள் கண்காட்சி

Published On 2023-01-07 10:49 GMT   |   Update On 2023-01-07 10:49 GMT
  • பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் இந்த கண்காட்சியில் கைத்தறி ஆடைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் நகைகள் இடம்பெற்றுள்ளன.
  • வீடுகளை அலங்கரிக்கும் ஏராளமான கைவினை கலைப்பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

சென்னை:

திருவான்மியூர் கலாஷேத்ரா மற்றும் பாம்பன் சுவாமி கோவில் எதிர்புறம் சிஇஆர்சி கண்காட்சி மைதானத்தில் கிருஷ்ணா ஆர்ட்ஸ் அன்ட் கிராப்ட்ஸ் நடத்தும் ஹஸ்தகலா உத்சவ் எனப்படும் கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் இந்த கண்காட்சியில் கைத்தறி ஆடைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் நகைகள் இடம்பெற்றுள்ளன.

கைத்தறி வகைகளில் பெண்களுக்கான ஆடைகள், அழகான வண்ணங்களிலும், புதுமையான டிசைன்களிலும் இடம் பெற்றுள்ளன. ஒடிசா இக்கத் சேலைகள், டிரஸ் மெட்டீரியல் போன்றவை வெஜிடபிள் டை வண்ணத்தில் கிடைக்கின்றன. இவை கையால் நெய்யப்பட்ட ஆடைகள் ஆகும். மத்திய பிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள சந்தேரி சில்க் காட்டன் சேலைகள், காட்டன் டிரஸ் மெட்டீரியல், ஜம்தானி காட்டன் சேலைகள், ஜம்தானி சில்க் சேலைகள் போன்றவையும் உள்ளன.

பெண்கள் விரும்பி அணியும் மேலாடைகள் காட்டன் வகைகளிலும், சில்க் வகைகளிலும் கிடைக்கின்றன. மேலும் குழந்தைகளுக்கான ஷார்ட் மேலாடைகள், அனார்கலி மேலாடைகள், ஸ்கர்ட் போன்றவை உள்ளன.

வீடுகளை அலங்கரிக்கும் ஏராளமான கைவினை கலைப்பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பிளாக் மெட்டலால் ஆன சாமி சிலைகள் இங்கு ஏராளம் உள்ளன. விநாயகர், கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து சாமி சிலைகளை இங்கு தேர்வு செய்யலாம். பித்தளையால் ஆன சாமி சிலைகள், நூக்க மரத்தினால் ஆன சிலைகள், சிற்பங்கள், ஜோத்பூர் மரத்தினால் ஆன சிற்பங்கள், கலைபொருட்கள் போன்றவையும் உள்ளன.

இளம்பெண்கள் விரும்பி அணியும் ஒரு கிராம் தங்க நகைகளும் இங்கு கிடைக்கின்றன. நெக்லஸ், மோதிரம், வளையல், ஒட்டியாணம், நெத்திச்சுட்டி, கொலுசு, பிரேஸ்லெட், செயின், ஆரம் உள்ளிட்ட நகைகளும் ஒரு கிராம் தங்க நகைகள் ஆகும்.

வருகிற 15-ந் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது. காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி உண்டு.

Tags:    

Similar News