குலசேகரத்தில் சுகாதாரத் திருவிழா மருத்துவ முகாம்: விஜய் வசந்த் எம்.பி. துவக்கி வைத்தார்
- டெங்கு, புகையிலை, தொழுநோய், காசநோய், ஊட்டச்சத்து போன்ற விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
- முகாமில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுகாதாரத் திருவிழா மருத்துவ முகாம் திருவட்டார் வட்டாரத்தை சார்ந்த குலசேகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, நரம்பியல் மருத்துவம், சிறுநீரக மருத்துவம், பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மனநலம் சிகிச்சை, கண் மருத்துவம், புகையிலை சம்பந்தமான சிகிச்சைகள், தொழுநோய், காசநோய், சித்த மருத்துவம், ஹோமியோபதி சம்பந்தமான சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் ஈசிஜி , எக்ஸ்-ரே, அனைத்து விதமான இரத்த பரிசோதனைகளும் செய்யப்பட்டது. டெங்கு, புகையிலை, தொழுநோய், காசநோய், ஊட்டச்சத்து போன்ற விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
முகம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் சந்தோஷ், துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் அருள்ராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். முகாமில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், திருவட்டார் மேற்கு வட்டாரத் தலைவர் வினுட்ராய், குலசேகரம் பேரூர் கமிட்டி தலைவர் வில்சன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.