அக்னி நட்சத்திரம் இன்று விடைபெற்றாலும் வெப்ப அலைகள் மேலும் 2 வாரங்கள் நீடிக்க வாய்ப்பு
- தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரம் தொடங்கும்.
- சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் வெப்ப சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
சென்னை:
அக்னி நட்சத்திரம் விடைபெற்ற பிறகாவது சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. ஆனால் வெப்ப அனல்கள் இன்னும் 2 வாரங்களுக்கு குறைய போவதில்லை என்றே வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நேற்று 13 இடங்களில் வெப்பம் சதம் அடித்த நிலையில் தொடர்ந்து இதே நிலைதான் ஜூன் முதல் வாரம் வரை நீடிக்கும் என்றார். தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான். அவர் மேலும் கூறியதாவது-
அக்னி வெயிலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பொதுவாகவே தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேற்கு திசையில் இருந்து தரைக்காற்று அதிகமாக வீசும்.
இது ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் இருந்து வெப்ப காற்றை இழுத்து வரும். இதனால் வட தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரம் வரை இதே நிலைதான் நீடிக்க வாய்ப்பு.
தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரம் தொடங்கும். இந்த பருவ மழை சென்னைக்கு கிடைக்காது. கேரளா, கன்னியாகுமரி, வால்பாறை, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்யும்.
சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் வெப்ப சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அதுவும் ஜூன் முதல் வாரத்துக்கு பிறகுதான்.
வேலூருக்கு பிறகு அதிக வெப்பம் பதிவாகும் நகரமாக சென்னை உள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் இரண்டு நாட்கள் உச்ச வெப்ப நிலை பதிவானது. அதாவது நுங்கம்பாக்கத்தில் 16-ந்தேதி 108.7 டிகிரியும், 27-ந்தேதி 106.88 டிகிரியும் பதிவாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.