உள்ளூர் செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை: இரவு முழுவதும் மின்தடை

Published On 2024-09-30 05:00 GMT   |   Update On 2024-09-30 05:00 GMT
  • திடீரென கனமழை பெய்தது.
  • ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 1 மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென மழை பெய்தது.

தொடர்ந்து நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் அடித்த நிலையில் நேற்று மாலையில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரை யிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் தொடங்கிய மழை நள்ளிரவு வரையிலும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.

சேரன்மகாதேவியில் 29.60 மில்லிமீட்டர் மழை பெய்தது. அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் பகுதிகளிலும் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் இரவு முழுவதும் பயங்கர இடி-மின்னலும் காணப்பட்டது. அம்பையில் 40.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராதாபுரத்தில் 21 மில்லிமீட்டரும், நாங்கு நேரியில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 40 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 23.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 251 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 98 அடியாக உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.

மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாக நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக நாலுமுக்கில் 26 மில்லி மீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 21 மில்லி மீட்டரும் மழை பெய்தது. காக்காச்சியில் 18 மில்லி மீட்டர், மாஞ்சோலையில் 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

மாநகரில் டவுன், பேட்டை, சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை சமாதானபுரம், மார்க்கெட் பகுதிகள், கே.டி.சி. நகர், என்.ஜி.ஓ. காலனி, டக்கம்மாள் புரம், மேலப்பாளையம் என மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் சென்ற வாகனங்கள் கடும் மழையால் சாலைகளில் ஊர்ந்தபடி சென்றதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

பாளை பகுதியில் விடிய விடிய பெய்த மழை காரணமாக இரவில் தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரையிலும் மின்சார வினியோகம் இல்லை. அதன்பின்னரும் மின்சாரம் வருவதும், போவதுமாக இருந்தது. மாநகரில் பல்வேறு இடங்களிலும் கடுமையான மின்வெட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

பாளை பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 84 மில்லிமீட்டரும், நெல்லையில் 49 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியது.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

தென்காசி, ஆய்க்குடியில் தலா 42 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது .மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 48.40 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சி நிலவியது.

கருப்பாநதி அணை பகுதியில் 67 மில்லிமீட்டர் மழை பெய்தது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வரும் 55 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 43 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 46 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

காயல்பட்டினம் பகுதியில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. அங்கு அதிகபட்சமாக 93 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறு, மணியாச்சி பகுதிகளில் 65 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 55 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழையும் கொட்டியது. இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

விளாத்திகுளம், கீழஅரசடி, வேடநத்தம், குலசேகரப்பட்டினம், சாத்தான்குளம், கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. இரவில் விட்டு விட்டு சாரல் மழையாக மாறி பெய்தது. ஓட்டப்பிடாரம் பகுதியில் இரவில் பெய்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.

Tags:    

Similar News