உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரத்தில் சூறை காற்றுடன் கனமழை: விசைப்படகுகள் சேதம்

Published On 2024-11-20 04:49 GMT   |   Update On 2024-11-20 04:49 GMT
  • சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
  • கடல் அலைகள் கரையில் பயங்கரமாக மோதின.

ராமநாதபுரம்:

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது. இதன் எதிரொலி யாக வங்கக்கடலில் வருகிற 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவில் கனமழையாக நீடித்தது. ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் 4 ரதவீதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது.

கடல் அலைகள் பல மீட்டர் தூரத்திற்கு எழுந்தது. ராட்சத அலைகள் கரையில் பயங்கரமாக மோதின.

தொடர் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக இன்று பெரும்பாலான மீவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. குறைந்த எண்ணிக்கையிலான படகுகள் மட்டுமே மீன்பிடிக்கச் சென்றன.


இதேபோல் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், கீழக்கரை, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சத்திரக்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று காலையும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட் டத்தில் இன்று மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விபரம் (மி.மீட்டரில்) வருமாறு:-

ராமநாதபுரம்-96, மண்டபம்-40.20, ராமேசுவரம்-38, பாம்பன்-30.40, தங்கச்சி மடம்-41, பள்ளம்மோர் குளம்-26.80, திரு வாடனை-9.80, தொண்டி-31, வட்டாணம்-46.80, தீர்த்தாண்டதானம்-63.30, ஆர்.எஸ்.மங்கலம்-32.40, பரமக்குடி-77, முதுகுளத்தூர்-40, கமுதி-24.80, கடலாடி-55, வாலி நோக்கம்-73.20 என மாவட்டத்தில் மொத்தமாக 745.70 மில்லி மீட்டர் அளவிலும் சராசரியாக 46.61 மில்லி மீட்டர் அளவில் மழை பதிவாகி உள்ளது.

இதற்கிடையே மண்டபம் வடக்கு துறைமுகம் பகுதியில் நேற்று இரவு வரலாறு காணாத அளவில் சூறாவளியுடன் கனமழை பெய்தது. அப்போது கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 15 விசைப்படகுகள் கரையில் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்த நிலையில் கிடந்தது. இதனால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். 

Tags:    

Similar News