திருப்பூரில் இந்து அமைப்பினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்- 400 பேர் கைது
- கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அரசு பேருந்தில் ஏற்ற முயன்றனர்.
- காவல்துறை வாகனத்தில் தான் செல்வோம் என இந்து அமைப்பினர் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையாக உள்ள இந்து மக்களை அங்குள்ள காவல் துறையினர் தாக்கி கைது செய்து ஆலயங்களை சேதப்படுத்துவதை கண்டித்தும், இந்து மக்கள் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ் .எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பாஜக., மாவட்ட தலைவர் செந்தில்வேல், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அரசு பேருந்தில் ஏற்ற முயன்றனர். ஆனால் காவல்துறை வாகனத்தில் தான் செல்வோம் என இந்து அமைப்பினர் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டு காவல்துறை வாகனம் மூலம் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்.