உள்ளூர் செய்திகள் (District)

பெண் போலீசாரை விமர்சித்து பேசியது தவறு என்பதை உணர்ந்து விட்டேன்-சவுக்கு சங்கர் வாக்குமூலம்

Published On 2024-05-17 05:55 GMT   |   Update On 2024-05-17 05:55 GMT
  • பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
  • பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் தப்புதான்.

திருச்சி:

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அதன் பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியது தொடர்பாக முசிறி டி.எஸ்.பி. யாஸ்மின் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் சேனலை சேர்ந்த பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

அதேபோன்று டெல்லியில் ஜெரால்டை கைது செய்து ரெயில் மூலம் அழைத்து வந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் சவுக்கு சங்கரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் மனு தாக்கல் செய்தார்.

இதை தொடர்ந்து கோவை ஜெயில் இருந்து சவுக்கு சங்கரை பெண் போலீசார் நேற்று முன்தினம் திருச்சி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி பின்னர் லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

பின்னர் நேற்று காலை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சவுக்கு சங்கரின் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ஏற்கனவே இந்த வழக்கில் கோவை போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். ஆகவே போலீஸ் காவலுக்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா, சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து அவரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

அங்கே விடிய விடிய போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது,பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதற்கு பின்னணியில் யார் யார்? கேட்டனர்.

அதற்கு சவுக்கு சங்கர் பதிலளிக்கும் போது, யாரும் என்னை தூண்டவில்லை. ஆளுங்கட்சியை விமர்சிப்பது தான் ஜார்னலிசம். எடப்பாடி பழனிச்சாமி ஆளுங்கட்சியாக இருந்தபோது அவரை விமர்சனம் செய்துள்ளேன்.

பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். அது தப்புதான். அதை இப்போது உணர்ந்துள்ளேன் என கூறியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் ஒருநாள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

இதனிடையே பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதற்காக திருச்சி சிறையில் இருந்து அவரை போலீசார் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News