பாரதியார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறை சேர்க்க முயற்சி
- நாடக வடிவில் படிக்கும் போது, இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் சென்றடையும்.
- திருப்பூர் தொழிலதிபர்கள் 10பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருப்பூர் :
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர போராட்ட வீரரான திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என பல்கலைக்கழக செனட் உறுப்பினர் டாக்டர் ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருப்பூர் குமரனின் தியாகம் மறக்க முடியா தது. இவரது வாழ்க்கையும், அவரது போராட்ட வழிமுறைகளும், நெஞ்சுறுதியும் இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்கக்கூடியது.
இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவது என்பது அவருக்கு செலுத்தும் பெரும் புகழஞ்சலியாக இருக்கும்.
குறிப்பாக நாடக வடிவில் படிக்கும் போது, இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் சென்றடையும். இதற்காகவே, திருப்பூர் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை தலைவர் ஆழ்வை கண்ணன் எழுதிய திருப்பூர் குமரன் நாடக நூல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இத்துடன் உள்ளூர் வரலாற்றையும், வளர்ச்சியையும் மாணவர்களுக்கும் எடுத்துக்கூறும் விதமாகவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் தொழிலதிபர்கள் 10பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.