குற்ற செயல்களை தடுக்க 723 ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று போலீசார் எச்சரிக்கை- தலைமறைவாக இருந்த 6 பேர் கைது
- போலீசார் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
- சிறப்பு தணிக்கையின் மூலம் சென்னையில் இதுவரை 2,493 பேர் மீது சட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பில் ஈடுபடுபவர்கள், ஆபாச படம் தயாரித்து மிரட்டு பவர்கள், மணல் கடத்தல், உணவு பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஆகியோரை கண்காணித்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் கொலை, கொலைமுயற்சி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் போலீசாருக்கு உததரவிட்டார். அதன்படி சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக ஒருநாள் சிறப்பு தணிக்கையை போலீசார் மேற்கொண்டனர். இந்த தணிக்கையின் போது கொலை, கொலைமுயற்சி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மற்றும் ஜாமீனில் வெளியே வந்த ரவுடிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். இனி குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்தனர். போலீசார் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும் பல்வேறு குற்றங்களில் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து கடந்த 2 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த 6 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை யாக 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சிறப்பு தணிக்கையின் மூலம் சென்னையில் இதுவரை 2,493 பேர் மீது சட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.