உடன்குடி வட்டார பகுதியில் பனிப்பொழிவு அதிகரிப்பு - இருப்பு வைத்த கருப்பட்டியை பாதுகாக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் தவிப்பு
- உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கு ஒரு தனி சிறப்பு உண்டு.
- பனிப்பொழிவால் இருப்பு வைத்த கருப்பட்டியில் பூஞ்சை என்ற வெள்ளை நிறத்தில் நூல் போன்ற பாசி படிகிறது.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார் களோ அங்கெல்லாம் உடன்குடி கருப்பட்டி இங்கு கிடைக்கும் என விளம்பர போர்டு வைத்த விற்பனை செய்வார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது உடன்குடி கருப்பட்டி ஆகும்.
கருப்பட்டியில் பூஞ்சை
தற்போது கருப்பட்டி உற்பத்தி சீசன் இல்லை. கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பட்டியை சிலர் தங்களது வீடுகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள். தற்போது உடன்குடி வட்டார பகுதியில் மழை முழுவதுமாக இல்லை.
இரவு, பகலாக பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதனால் இருப்பு வைத்த கருப்பட்டியில் பூஞ்சை என்ற வெள்ளை நிறத்தில் நூல் போன்ற பாசி படிகிறது. இதை தடுக்க கருபட்டிக்கு புகைமூட்டம் போடுகிறார்கள். அப்படி இருந்தும் சில இடங்களில் கருப்பட்டி கசிந்து தண்ணீராக வெளி வருகிறது. இது பற்றி கருப்பட்டி உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-
உற்பத்தியாளர்கள் தவிப்பு
கடந்த காலங்களில் உற்பத்தி செய்த கருப்பட்டி யை வீடுகளில் பரன்களில் போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளோம். இருப்பு கருப்பட்டிக்கு விலை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வைத்தோம். ஆனால் தற்போது மழைக்காலத்தில் மழை பெய்யவில்லை. ஆனால் இரவு, பகலாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.
மழை பெய்தால் கூட கருப்பட்டிக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் பனிப்பொழிவால் எல்லா கருப்பட்டியிலும் பூஞ்சை பிடிக்கிறது. புகை போட்டாலும் அதை மீறி பூஞ்சை பிடிக்கிறது. கூடுதல் விலை கிடைக்கும் என்று நினைத்தோம்.ஆனால் பனிப்பொழிவில் எல்லாம் கசிந்து விடும் போல தெரிகிறது.
மேலும் கருப்பட்டி அதிகளவு கருப்பாக இருந்தால் வாடிக்கை யாளர்கள் வாங்க மறுக்கின்றனர், அதனால் கருப்பட்டியை எப்படி பாதுகாப்பது என்பது தெரியாமல் நாங்கள் தவிக்கிறோம் என்று கவலையுடன் கூறினார்.