நீர்வரத்து அதிகரிப்பு: நெல்லை, தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் `கிடுகிடு' உயர்வு
- பாபநாசம் அணை பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது.
- இன்றும் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் வாட்டிய நிலையில், பிற்பகலில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது.
இதனால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை, டவுன் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பரவலாக பெய்தது.
மாவட்டத்தில் சேரன்மகா தேவி, கன்னடியன் கால்வாய் பகுதிகளில் மட்டும் சாரல் அடித்தது. களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
மேலும் இதமான காற்றும் வீசியது. இதனால் குளிர்ச்சி யான சூழ்நிலை நிலவியது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. பிற்பகலில் தொடங்கி இரவிலும் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறில் 9 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 3.8 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று ஒரு அடி உயர்ந்து 88.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 98 அடியாக இருந்த நிலையில் இன்று 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,258 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கார் பாசனத்திற்காக 804 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 77.49 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணையில் 3.8 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்றும் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கார் சாகுபடிக்கான பணியில் அவர்கள் ஆர்வமுடன் இறங்கி உள்ளனர்.
மேலும் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணி முத்தாறு அருவி, களக்காடு தலையணை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால், அதில் குளிக்க சுற்றுலாp பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் அதிக மழை பொழியும் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலையில் கனமழை பெய்துள்ளது. அங்குள்ள ஊத்து எஸ்டேட்டில் இன்று காலை வரை 6.8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நாலுமுக்கில் 6.6 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 56 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை யில் 4.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கும் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக ராமநதி அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. நேற்று 66 அடியாக இருந்த நிலையில், இன்று 69 அடியாக அதிகரித்துள்ளது.
அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 71 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 30 அடியை கடந்துள்ளது. 36 அடி கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் 33 அடியை எட்டியுள்ளது. இதனால் இன்னும் ஒருசில நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் அதிகபட்சமாக அடவிநயினாரில் 23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடனா மற்றும் ராமநதியில் தலா 10 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் திடீர் சாரல் மழை பெய்தது. இரவிலும் விட்டு விட்டு சாரல் அடித்தது. செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 4.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதே நேரம் அவ்வப்போது லேசான மேகமூட்டமும், காற்றும் வெயிலை தணித்து வந்தது. அதன்படி நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மேகங்கள் திரண்டு பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.