அய்யலூர் அருகே உணவுப்பூங்காவை விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தல்
- அய்யலூர் பேரூராட்சியில் உள்ள தங்கமாபட்டியில் ரூ.82 கோடியில் மாம்பழ கூழ், நிலக்கடலை, புளி, தக்காளி, வெங்காயம் போன்ற உணவு பொருட்களை பாதுகாக்க உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- உணவு பூங்கா விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமதுரை:
தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை 2018 ம் ஆண்டின்படி தமிழ்நாட்டில் 10 மெகா உணவு பூங்கா அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர் பேரூராட்சியில் உள்ள தங்கமாபட்டியில் ரூ.82 கோடியில் மாம்பழ கூழ், நிலக்கடலை, புளி, தக்காளி, வெங்காயம் போன்ற வேளாண் பொருட்களை உணவுப் பொருட்களாக மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் உணவு பூங்கா அமைக்க அரசு அனுமதி வழங்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு முதல் அதற்கான வேலைகள் நடைபெறத் தொடங்கின.
இதற்காக 10 ஏக்கரில் உணவு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இங்கு குளிப்பதனால் கட்டமைப்புகள் வணிகம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அய்யலூர் தக்காளி விவசாயி கூறுகையில்:- அய்யலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தக்காளி அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அய்யலூரில் தக்காளிக்கென தனி மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகிறது. அய்யலூரில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும் தக்காளிக்கு ஆதார விலை கூட இல்லாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றன. வரத்து அதிகமாக இருந்ததால் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் உழவு கூலி கூட மிஞ்சாது எனவும் கூறுகிறார். அய்யலூர் தங்கம்மாபட்டியில் உருவாகிக் கொண்டிருக்கும் உணவு பூங்கா விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுமேயானால் எங்கள் பகுதியில் தக்காளி ஜூஸ் செய்யும் கம்பெனிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் நிரந்தர விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்புகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அய்யலூர் பேரூராட்சி தலைவர் கருப்பன் கூறுகையில் :- உணவு பூங்கா பணிகளை வேளாண்துறை விரைந்து முடிக்க வேண்டும் எனவும். அய்யலூர் எரியோடு போன்ற சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத் தொழிலை பிரதான தொழிலாக மக்கள் செய்து வருகின்றனர். மேலும் புளி உடைத்தல், விதை எடுத்தல் போன்ற அத்தியாவசியமான தொழிலே செய்து வருகின்றனர். இந்த உணவு பூங்கா விரைந்து செயல்பாட்டிற்கு வந்தால் விவசாயிகள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். மேலும் இந்த உணவு பூங்காவில் உணவு பதப்படுத்தப்படும் கிடங்கு உள்ளதால் அதிக அளவு விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவித்தார்.