- 8 தாலுகாவில் 1,300 பள்ளி பஸ் இயங்குகிறது.
- விரைவில் கூட்டாய்வு கூட்டம் நடக்குமென வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் :
பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஆண்டின் இருமுறை பள்ளி பஸ்களின் நிலை குறித்து ஆராய்ந்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு பள்ளிகள் தொடங்கிய நிலையில் தனியார் பள்ளிகளில் பஸ்கள் இயக்கம் பல பகுதிகளுக்கு துவங்கியுள்ளது.இந்நிலையில் பள்ளி பஸ்கள் எந்த நிலையில் உள்ளது. முன்பக்க, பின்பக்க, அவசர கதவுகள் நிலை, இருக்கை முதலுதவி வசதி, படிக்கட்டுகளின் உயரம், வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவை குறித்து திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து துறை சார்பில் வரும் 25-ந்தேதி திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் ஆய்வு நடத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவில் 1,300 பள்ளி பஸ் இயங்குகிறது. இவற்றில் வடக்கு, தெற்கு ஆர்.டி.ஓ., எல்லைக்கு உட்பட்ட பஸ்கள் மட்டும் 25 -ந்தேதி ஆய்வு செய்யப்படுகிறது. அடுத்த வாரத்தில் தாலுகா அளவில் பள்ளி பஸ் ஆய்வு நடக்கவுள்ளது. ஆய்வு விபரங்கள் ஜூலை முதல் வாரத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கையாக சமர்பிக்கப்பட உள்ளது.
பள்ளி பஸ் ஆய்வுக்கு முன்னதாக பள்ளிகல்வித்துறை, வட்டார போக்குவரத்து துறை, போலீசார், பள்ளி நிர்வாகங்கள் இணைந்த ஆய்வு கூட்டம் நடத்தப்படும். இதில், பள்ளி பஸ்கள் எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கப்படும். நடப்பு கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், விரைவில் கூட்டாய்வு கூட்டம் நடக்குமென வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.