உள்ளூர் செய்திகள்

முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் பலி

Published On 2023-04-28 06:02 GMT   |   Update On 2023-04-28 06:02 GMT
  • பாகன் பாலன் மசினி யானைக்கு உணவு கொடுப்பதற்காக உணவு தயாரித்தார்.
  • வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.

தெப்பக்காடு, அபயராண்யம் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த யானைகளை அங்கு வசித்து வரக்கூடிய பாகன்கள் பராமரித்து வருகின்றன. காலை, மாலை என இரு வேளைகளிலும் யானைக்கு ராகி, ஊட்டச்சத்து தானியங்கள் நிறைந்த உணவினை உருண்டையாக உருட்டி கொடுத்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி யானைகளை நடைபயிற்சி அழைத்து செல்வது, மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது என பல்வேறு பணிகளில் பாகன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற வளர்ப்பு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை பாகன் பாலன் (வயது54). என்பவர் பராமரித்து வந்தார். இவர் கடந்த பல வருடங்களாக இந்த யானையை பராமரித்தார்.

இவர் தினமும் காலையில் அந்த யானைக்கு, ராகி, ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களை உணவாக கொடுப்பார். பின்னர் அந்த யானையை அங்குள்ள பகுதியில் சிறிது நேரம் நடைபயிற்சிக்கு அழைத்து செல்வார். பின்னர் மீண்டும் முகாமுக்கு அழைத்து வருவது வழக்கம்.

அதன்படி இன்று காலை பாகன் பாலன் மசினி யானைக்கு உணவு கொடுப்பதற்காக உணவு தயாரித்தார். பின்னர் அந்த உணவினை எடுத்து கொண்டு மசினி யானையின் அருகே சென்றார்.

பின்னர் அந்த யானைக்கு உணவை கொடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மசினி யானை பாகனை தாக்கி விட்டது. இதில் பாகன் பாலன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதை பார்த்த சக பாகன்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து காயம் அடைந்த பாலனை தூக்கி கொண்டு வனத்துறை வாகனத்தில் கூடலூர் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே பாகன் பாலன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News