தென்காசியில் மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனை
- விநாயகர் பூஜைக்காக பூக்களும் அதிக அளவில் விற்பனையாகும்.
- சிவகாமிபுரம் பூ சந்தையில் பிச்சி பூ-ரூ.1,250-க்கு விற்பனையானது.
தென்காசி:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனை யொட்டி முழு முதற் கடவுளான விநாயகருக்கு படையலிட அவல், பொறி உள்ளிட்டவை வாங்குவது வழக்கம். மேலும் விநாயகர் பூஜைக்காக பூக்களும் அதிக அளவில் விற்பனையாகும்.
இதனையொட்டி தென்காசி மாவட்டத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் பூ சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.1500-க்கு விற்பனையானது. பிச்சி பூ-ரூ.1,250, சம்பங்கி-ரூ.350, கேந்தி பூக்கள்-ரூ.40, கோழி கொண்டை-ரூ.50, முல்லை ரூ.1,000, பச்சை கொழுந்து-ரூ.40 என இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் பருவமழை போதிய அளவில் பெய்யாததால் வறட்சி காரணமாக தோட்டங்களில் பூக்கள் பயிரிட்ட விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுவதற்கு பெரிதும் சிரம் அடைந்தனர்.
இதனால் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், திப்பணம்பட்டி, ஆவுடையா னூர், கல்லூரணி, சிவநாடா னூர், முத்து மாலைபுரம், பெத்த நாடார்பட்டி, சாலைப்புதூர், கரிசலூர், ஆலங்குளம், வீரகேர ளம்புதூர், ஆண்டிப்பட்டி, அத்தியூத்து, முத்து கிருஷ்ணபேரி போன்ற பகுதிகளில் பூக்கள் விளைச்சல் மிகவும் குறைந்து காணப்பட்டது.
இதனால் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் பூக்களின் வரத்தும் கணிசமாக குறைந்தது. இதன் காரணமாகவே பூக்களின் விலை உயர்ந்துள்ளது எனவும், இன்றும், நாளையும் பூக்களின் விலை மேலும் உயரும் எனவும் வியாபாரிகள் கூறினர்.