காரைக்கால் கோர்ட் அருகே பஸ் நிறுத்தத்தை ஜே.சி.பி. எந்திரத்தால் இடித்தவர் கைது
- பஸ் நிறுத்தம் அடையாளம் தெரியாத நபரால் ஜே.சி.பி எந்திரம் மூலம் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- சந்தேகம் படும்படியாக ஜே.சி.பி எந்திரத்துடன் நின்றார்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் அரசு விளையாட்டு அரங்கம் அருகே பஸ் நிறுத்தம் இருந்தது. கடந்த 7ந் தேதி நள்ளிரவு இந்த பஸ் நிறுத்தம் அடையாளம் தெரியாத நபரால் ஜே.சி.பி எந்திரம் மூலம் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அன்று நள்ளிரவு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் நகர போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி மர்ம நபர்களை கண்டுபிடித்து உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், காரைக்கால் நகராட்சி பில் கலெக்டர் ஜோசப் என்பவர் நேற்று காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், கடந்த 7ந் தேதி இரவு விழுப்புரம் வானூர் பகுதியைச்சேர்ந்த செந்தில்குமார் (வயது 44) பஸ் நிறுத்தம் அருகே சந்தேகம் படும்படியாக ஜே.சி.பி எந்திரத்துடன் நின்றார். அவர்தான் நகராட்சிக்கு சொந்தமான ரூ.2 லட்சம் மதிப்பிலான பஸ் நிறுத்தை இடித்திருக்கவேண்டும். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதன்படி போலீசார் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.