உள்ளூர் செய்திகள்

 கள்ளக்குறிச்சி அருகே அரிய பெருமானூரில் டிரோன் மூலம் கரும்பு பயிருக்கு மருந்து தெளிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு

Published On 2022-06-25 09:14 GMT   |   Update On 2022-06-25 09:14 GMT
  • கள்ளக்குறிச்சி அருகே டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • கரும்பு பயிரில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

 கள்ளக்குறிச்சி:

உழவர் நலத்துறை மற்றும் இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் இணைந்து கள்ளக்குறிச்சி அருகே அரியபெருமானூர் கிராமத்தில் கரும்பு பயிரில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) விஜயராகவன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர்(த.க) அன்பழகன் பயிர் சாகுபடியில் அதிகப்படியான இராசயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்து,தேவையான அளவு பயிர்களுக்கு உரமிட்டு மண்வளத்தை பாதுகாத்திட வேண்டும் என கூறினார்.இப்போ உர நிறுவன பிரதிநிதி அப்துல்ரகுமான் கூறுகையில் விவசாயிகள் தழைச்சத்து உரமான குருணை யூரியாவுக்கு மாற்றாக அனைத்து பயிர்களுக்கும் மேலுரமாக இப்கோ நானோ யூரியாவை ஏக்கருக்கு 500 மில்லி என்ற அளவில் காலை அல்லது மாலை வேளைகளில் தெளிப்பதன் மூலம் உரச்செலவை மிச்சப்படுத்திடவும் மண்வளத்தை பாதுகாக்கலாம் என கூறினார்.

மேலும் நானோ யூரியாவை டிரோன் மூலம் தெளிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் விளக்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விவசாயிகள் இரசாயன உரங்களை இடுவதை குறைத்து தக்கைப்பூண்டு, சணப்பை, கொளஞ்சி போன்ற பசுந்தாள் பயிர்களை விதைத்து பூக்கும் பருவத்தில் வயலில் மடக்கி உழுவதுடன், நன்கு மக்கிய தொழுவுரம் மற்றும் புண்ணாக்கு வகைகளையும் உரங்களாக பயன்படுத்தும்போது பயிர்களுக்கு பூச்சிநோய் தாக்குதல் இன்றி அதிக மகசூல் பெற்றிடவும்,நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்திடவும் விவசாயிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.இதனை தொடர்ந்து கரும்பு பயிரில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

அப்போது கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் செந்தில்குமார், கரும்பு அலுவலர்கள், கரும்பு உதவியாளர்கள், வேளாண்மை துறையை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கிராம முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News