உள்ளூர் செய்திகள்

சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்ட கன்னியாகுமரி கடற்கரை

Published On 2024-05-31 05:40 GMT   |   Update On 2024-05-31 05:45 GMT
  • காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் பகுதிகளில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
  • சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்று குறைவாக காணப்பட்டது. கடற்கரை பகுதிகள் வெறிச்சோடியது.

நாகர்கோவில்:

கன்னியாகுமரிக்கு கோடை விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இதனால் கன்னியாகுமரி கடற்கரை காலை, மாலை நேரங்களில் பரபரப்பாக இருக்கும். சூரிய உதயத்தை காண காலையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததால் கன்னியாகுமரி களைகட்டி இருந்தது. கோடை விடுமுறை முடிவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.


நேற்றும் காலையில் கூட்டம் அலைமோதிய நிலையில், பிரதமர் மோடி 3 நாள் கன்னியாகுமரி வருகையைடுத்து கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கடற்கரை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பிரதமர் கன்னியாகுமரி வந்திருப்பதை தொடர்ந்து கன்னியாகுமரியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்று குறைவாக காணப்பட்டது. கடற்கரை பகுதிகள் வெறிச்சோடியது.

காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் பகுதிகளில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் இன்று அந்த சாலை வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரியில் உள்ள கடைகள் வழக்கம் போல் திறந்து செயல்பட்டாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இல்லாததால் வியாபாரம் இன்றி வெறிச்சோடி இருந்தது.

Tags:    

Similar News