கோட்டார் போலீஸ் நிலையத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் மீது பா.ஜனதாவினர் புகார்
- இந்து சமய மாநாட்டை அமைச்சர் மனோதங்கராஜ் தலையிட்டு நிறுத்தியுள்ளார்
- இந்து சமுதாய மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது
நாகர்கோவில் :
மண்டைக்காடு கோவிலில் சமய மாநாட்டிற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து மாவட்டம் முழுவதும் பாரதிய ஜனதாவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். கோட்டார் போலீஸ் நிலையத்தில் கிழக்கு மண்டல தலைவர் ராஜன் தலைமையில் வந்த பாரதிய ஜனதாவினர் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கடந்த 85 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்து சமய மாநாட்டை அமைச்சர் மனோதங்கராஜ் தலையிட்டு நிறுத்தியுள்ளார். இதனால் குமரி மாவட்டத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குமாரகோவிலில் தேரோட்டத்தின் போது மாற்று மதத்தினர் மற்றும் அமைச்சர் மனோதங்கராஜ் விதி முறையை மீறி செயல்பட்டனர்.
அமைச்சர் மனோ தங்கராஜின் இத்தகைய நடவடிக்கைகள் இந்து சமுதாய மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் மண்டைக்காட்டில் நடைபெற்ற கலவரத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட வேணுகோபால் கமிஷன் பரிந்துரைக்கு எதிராக பல ஆண்டுகளாக அனுமதி கொடுக்கப்படாமல் இருக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விதிமுறைகளுக்கு மாறாக அனுமதி வழங்க மாவட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அமைச்சர் மனோ தங்கராஜ் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
அப்போது மாவட்ட பொருளாளர் முத்துராமன், கவுன்சிலர் ரோசிட்டா, கிழக்கு மண்டல கல்வியாளர் பிரிவு துணை தலைவர் பிரசாத், நிர்வாகி அஜித் குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்