உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மாணவர்கள் திடீர் மோதல்

Published On 2023-09-03 09:30 GMT   |   Update On 2023-09-03 09:30 GMT
  • பொதுமக்கள் மற்றும் இளம்பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
  • மதுபோதை தகராறில் அடிக்கடி மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது

நாகர்கோவில் :

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் நேற்று மாணவர்கள் ஏராளமானோர் அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது புத்தேரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் அங்கு வந்தனர்.

பஸ் நிலையத்தில் வைத்து அவர்களுக்குள் திடீரென மோதல் உருவானது. ஒரு மாணவரை மற்ற 3 பேர் சேர்ந்து தாக்கினர். இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் இளம்பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை அறிந்த மாணவர்கள் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் காயம் அடைந்த மாணவரை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் குடிபோதை தகராறில் மோதல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட 4 மாணவர்களும் முட்டம் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு கூட்டாக சேர்ந்து மது குடித்துள்ளனர். முட்டம் கடற்கரை சுற்றுலா பகுதி என்பதால் மாணவர்களை மது குடிக்க கூடாது என்று கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து புறப்பட்ட மாணவர்கள் அண்ணா பஸ் நிலையம் வந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மதுபோதை தகராறில் அடிக்கடி மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எனவே அங்கு பாதுகாப்பு பணியை பலப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News