உள்ளூர் செய்திகள்

போராட்டத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்ட முகிலன் விடுதலை

Published On 2022-09-15 09:30 GMT   |   Update On 2022-09-15 09:30 GMT
  • போராட்டத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்ட முகிலன் விடுதலை செய்யப்பட்டார்.
  • கல்குவாரிக்கு எதிராக போராடியவர் கொல்லப்பட்ட விவகாரம்

கரூர்:

கரூர் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் சமூக ஆர்வலர். இவருக்கும் செல்வகுமார் என்பவருக்கும் இடையே விவசாய நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் செல்வகுமாரின் கல்குவாரி உரிமம் முடிந்த பிறகும் இயங்கி வருவதாக ஜெகநாதன் கனிமவளத்துறைக்கு பல்வேறு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து கல்குவாரி சட்ட விரோதமாக செயல்பட்டது தெரிய வந்ததால், கனிம வளத்துறை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி க. பரமத்தி அருகே காருடையாம்பாளையம் என்ற இடத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெகநாதன் மீது மினிலாரி ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே. பரமத்தி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், லாரி டிரைவர் சக்திவேல், ரஞ்சித் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெகநாதனின் உடல் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஜெகநாதனின் குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கேட்டு உடலைப் பெற மறுத்து அவரது உறவினர்களும், சமூக ஆர்வலர் முகிலன், சாமானிய மக்கள் நல கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தை தூண்டுவதாக, போலீசார் முகிலன் உட்பட 2 பேைர கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு இருவரும் பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக கலெக்டர் பிரபுசங்கரை சந்தித்த ஜெகநாதனின் மனைவி ரேவதி தன் கணவர் உடலை பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து நேற்று மாலை ஜெகநாதன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News