விடுதிகளில் கஞ்சா, போதை பொருட்கள் பதுக்கி வைத்த 24 பேர் கைது- 3 கட்டிடங்களுக்கு சீல்
- தனியார் விடுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- ரோந்து பணி நடைபெறும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து போலீசார் மலைப்பகுதியில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முக்கிய சுற்றுலா தலமான வட்டக்கானல் பகுதியில் போதை வஸ்து பயன்பாடு அதிகரித்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கோட்டாட்சியர் சிவராம், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், சுற்றுலாத்துறை, போலீசார் இணைந்து இப்பகுதியில் உள்ள தனியார் விடுதிகள் முறையாக செயல்படுகிறதா, போதை வஸ்துகள் பயன்படுத்தப்படுகிறதா என அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பாலா என்பவரின் 2 தங்கும் விடுதியிலும், மேற்பார்வையாளராக பணிபுரியும் கோவிந்தராஜ் என்பவரின் உட்ஹவுஸ் தங்கும் விடுதியிலும் சுற்றுலாப்பயணிகள் கஞ்சா பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் மது பாட்டில்கள் அளவிற்கு அதிகமாக வைத்து இருந்தனர். இதுதொடர்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளையும், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் உட்ஹவுஸ் மேற்பார்வையாளர் உள்பட 24 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 3 தங்கும் விடுதிக்கும் சீல் வைக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் அளவிற்கு அதிகமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் விடுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்தார். சுற்றுலாப்பயணிகளுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது. யார் இவர்களுக்கு விற்பனை செய்தனர் என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையால் வட்டக்கானல் பகுதியில் பரபரப்பு நிலவியது. கொடைக்கானலில் நகர் மற்றும் மலை கிராம பகுதிகளில் தொடர்ந்து தீவிர ரோந்து பணி நடைபெறும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.