திண்டிவனம் அருகே தனியார் பஸ் மோதி கூலித் தொழிலாளி பலி:ஆயுத பூஜை கொண்டாட சென்ற போது பரிதாபம்
- இவர் திண்டிவனத்தில் உள்ள வேல்டிங் கடையில் வெல்டராக பணிபுரிந்து வந்தார்.
- அதிவேகமாக வந்த தனியார் பஸ் ராமதாஸ் மீது மோதியது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல் சிவிரி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்( வயது 33). இவர் திண்டிவனத்தில் உள்ள வேல்டிங் கடையில் வெல்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாரில் உள்ள ராமதாசின் மாமியார் வீட்டில் தங்கி உள்ளனர். அவர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடுவதற்காக திண்டிவனத்தில் இருந்து பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் தெள்ளார் நோக்கி ராமதாஸ் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த ஊரல் அருகே வரும்போது அதிவேகமாக வந்த தனியார் பஸ் ராமதாஸ் மீது மோதியது.இந்த விபத்தில் ராமதாஸ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த ரோசனை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமதாஸின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ்சை பறிமுதல் செய்து வேலூர் பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் தினேஷ்குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆயுத பூஜை கொண்டாடச் சென்ற வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில் இந்த பகுதி மிகவும் குறுகிய சாலை பகுதியாகவும் இந்த பகுதியில் திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி,வேலூர், செல்லும் தனியார் பஸ்கள் அதிக ஒலி எழுப்பி அதி வேகமாக செல்வதே தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதாக தெரிவித்தனர்.எனவே டிரைவர்களுக்கு போலீசார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறையினர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.