நாளை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
- நாளை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மதுரை
மதுரை நகரின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. விழாவில் நேற்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. இன்று இரவு திக்குவிஜயம் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (2-ந் தேதி) கோலாகலமாக நடக்கிறது.
கோவிலின் வடக்கு-மேற்கு ஆடி வீதிகளில் உள்ள திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வண்ண மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக திருமணம் நடக்கும் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானையுடன் முருகப்பெருமான் ஆகியோர் பல்லக்கில் புறப்பட்டு வந்தனர்.
முன்னதாக நாளை அதிகாலை 4 மணியளவில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் உலா வருகிறார்கள்.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நாளை இரவு சுவாமி அம்பாள் மணக்கோலத்தில் யானை-ஆனந்தராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.
பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த கோவில் மற்றும் சித்திரை, மாசி வீதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பக்தர்கள் தங்களது வாகனங்களை எந்த எந்த பகுதிகளில் நிறுத்துவது தொடர்பாக மாநகர போலீசார் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்
திருக்கல்யாணத்தை முன்னிட்டு போக்குவரத்து இடையூறை தவிர்க்கும் வகையில், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள நான்கு ஆவணி, மாசி, வெளி வீதிகள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி இன்று இரவு 11 மணியில் இருந்து ஆவணி மூலவீதிகளில் வாகனங்கள் செல்லவோ, நிறுத்தவோ அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் அன்று அனுமதி அட்டை இல்லாத இருசக்கர- நான்கு சக்கர வாகனங்கள் கிழக்கு, தெற்கு, வடக்கு மாசி வீதிகளில் நிறுத்த அனுமதி தரப்பட்டுள்ளது. மஞ்சள் நிற பாஸ் வைத்து இருப்பவர்கள் வடக்கு- மேலமாசி வீதி சந்திப்பு வழியாக, தானப்பமுதலி தெருவில் மேற்கு ஆவணி மூலவீதியிலும், பிங்க் நிற பாஸ் வைத்து இருப்பவர்கள் வடக்கு ஆவணி மூல வீதியிலும், நீல நிற பாஸ் வைத்து இருப்பவர்கள் கட்டப்பொம்மன் சிலை, நேதாஜி ரோடு வழியாக வாகனங்கள் நிறுத்த அனுமதி தரப்பட்டு உள்ளது. கீழ ஆவணி மூலவீதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை.
இது தவிர மற்ற மாசி வீதிகளில் பகல் 12 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.
மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.