மகாவீரர் ஜெயந்தி விழா- தலைவர்கள் வாழ்த்து
- அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரர், அரச வாழ்வை துறந்து, தமது செல்வத்தையெல்லாம் மக்களுக்கு தானமாக வழங்கியவர்.
- மகாவீரர் விரும்பியவாறு மது இல்லாத உலகம், அன்பு நிறைந்த மக்களை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.
சென்னை:
மகாவீரர் ஜெயந்தி விழாவையொட்டி தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். அவர்கள் கூறியதாவது:-
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி:-
பீகார் தலைநகர் பாட்னா அருகில் அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரர், அரச வாழ்வை துறந்து, தமது செல்வத்தையெல்லாம் மக்களுக்கு தானமாக வழங்கியவர். அகிம்சையை கடைபிடிக்க வேண்டும், கொல்லாமையும், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையுமே அறம் என்பதை மக்களுக்கு விளக்கி, அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர். அவரது பிறந்தநாளை கொண்டாடும் இந்நாளில், தமிழகத்தில் அவரின் போதனைகளை பின்பற்றி வாழும் ஜைன சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
துறவறத்தின் அடையாளமாக போற்றப்படும் மகாவீரரின் பிறந்தநாளைக் கொண்டாடும் சமண மத சகோதரர், சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-
மனிதர்களை மட்டுமின்றி, உலகின் அனைத்து உயிரினங்களையும் மதித்த மகாவீரரின் பிறந்தநாளைக் கொண்டாடும் சமண மத சகோதரர், சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காமல் வாழ்ந்து காட்டிய மகாவீரரின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த நன்னாளில், அவரின் போதனைகளை பின்பற்றி வாழவும், அவர் விரும்பியவாறு மது இல்லாத உலகம், அன்பு நிறைந்த மக்களை உருவாக்கவும் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.