ஆண்டிபட்டியில் ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது
- ரோந்துப்பணியின் போது ராஜதானி அருகே சந்தேகத்திற்கிடமாக ஒருவர் அரிசி மூடைகளை ஏற்றி சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
- ரேசன்அரிசி கடத்திய வாலிபரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி, மறவபட்டி உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களில் பொதுமக்களிடம் ரேசன் அரிசியை வாங்கி அதனை சுத்தம் செய்து கேரளாவுக்கு விற்பனை செய்து வருவதாக போலீ சாருக்கு புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து போலீசாரும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரும் தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர்.
இன்று ராஜதானி அருகே சந்தேகத்திற்கிடமாக ஒருவர் அரிசி மூடைகளை ஏற்றி சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அவர் 900 கிலோ ரேசன் அரிசி மூடைகளை விற்பனைக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது.
பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி அதனை பாலீஸ் செய்து கேரளாவுக்கு விற்று வந்துள்ளார். பிடிபட்டவர் சின்னமனூரை சேர்ந்த முத்துக்குமார் என்பதும், இவர் தொடர்ந்து இதேபோல ரேசன் அரிசி விற்று வருபவர் எனவும் உறுதியானது.
இதனையடுத்து பறிமுதல் செய்த அரிசியை உத்தம பாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
முத்துக்குமாரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.