- உள்ளூர் பயணிகள் உட்பட பல்வேறு ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
- பாடல்கள் ஒளிபரப்ப ஒவ்வொரு பெட்டியிலும் ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2020 ஏப்ரல் மாதம் முதல் எக்ஸ்பிரஸ், உள்ளூர் பயணிகள் உட்பட பல்வேறு ரெயில்கள் நிறுத்தப்பட்டன. இதில் ஈரோடு - கோவை மற்றும் ஈரோடு - பாலக்காடு, சேலம் - கோவை வரை இயக்கப்பட்ட மெமு ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.இதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழிந்து, கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் ஈரோடு - கோவை இடையே மீண்டும் மெமு ரெயில் சேவையை துவங்கியது.
தற்போது விடப்பட்டுள்ள அதி நவீன மெமு ரெயிலில் கழிவறை, சீட் அமைப்புகள் வசதியாகவும், அனைத்து பெட்டிகளிலும் அதி நவீன கண்காணிப்பு கேமரா ஒவ்வொரு பெட்டியிலும் 4 வீதம் அனைத்து பெட்டிகளிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளதோடு, ரெயிலில் நடக்கும் விரும்பத்தகாத செயல்களும் குறைந்துள்ளது.மேலும் கேமரா பொருத்தப் பட்டுள்ளதால் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகள் இதன் மூலம் கண்டுபிடிக்க உதவி கரமாக இருந்து வருகிறது.பயணிகள் ரெயிலில் கண்காணிப்பு கேமரா மட்டுமின்றி, அடுத்து வரும் ெரயில் நிலையம் பற்றி டிஜிட்டல் அறிவிப்பு பலகை,பாடல்கள் ஒளிபரப்ப ஒவ்வொரு பெட்டியிலும் ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.