உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

மழைக்கால மின் விபத்துக்களை தவிர்க்கும் வழிமுறைகள் - மின்வாரியம் விளக்கம்

Published On 2022-06-17 07:59 GMT   |   Update On 2022-06-17 08:03 GMT
  • பாதையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அருகில் சென்று தொடக்கூடாது.
  • திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள்.

திருப்பூர் :

பருவமழை பெய்ய தொடங்கி இருப்பதால் மின் விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டுமென மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து திருப்பூர் மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாதையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அருகில் சென்று தொடக்கூடாது.மின் கம்பி அறுந்தாலோ, கம்பி ஆபத்தான நிலையில் இருந்தாலோ அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்*ன்டை.

மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய பணியாளர் மூலமாக மட்டுமே சரி செய்து கொள்ள வேண்டும். வெளியாட்களை கொண்டு மின்கம்பத்தில் வேலை செய்ய கூடாது. கால்நடைகளை மின்கம்பம் அல்லது இழுவை கம்பிகளில் கட்டி வைக்கக்கூடாது. இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் நிற்கக்கூடாது.மின்கம்பி, மரங்கள், உலோக கம்பி வேலி இல்லாத தாழ்வான பகுதியில் இருக்க வேண்டும்.

மிக உயரமான வாகனங்களை மின் கம்பி குறுக்கே செல்லும் பாதையில் இயக்குவதை தவிர்க்க வேண்டும்.பண்ணைகள், வயல்களில் மின் வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றம். அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே வயரிங் செய்ய வேண்டும். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய, 3பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலம் மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

மின் கசிவு தடுப்பானை(இ.எல்.சி.பி.,), மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்க்கலாம். சுவிட்ச்கள், பிளக்குகள் போன்றவற்றை எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

மின் கம்பத்துக்காக போடப்பட்ட, ஸ்டே கம்பி மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்துவதை தவிர்க்க வேண்டும். குளியல் அறை, கழிப்பறை மற்றும் ஈரமான இடங்களில் சுவிட்ச் பொருத்தக்கூடாது. மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீ விபத்து மின்சாரத்தால் ஏற்பட்டிருந்தால் உடனடியாக மெயின் சுவிட்ச்சை நிறுத்திவிட வேண்டும்.

இடி அல்லது மின்னலின் போது, டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசி மற்றும் செல்போன் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது. மேலும் திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள். ஜன்னல், இரும்பு கதவு ஆகியவற்றை தொடக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின்பாபு கூறுகையில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும். தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.பேரிடர்கால மின்தடை தகவல்களுக்கும், புகார்களுக்கும், 94987 94987 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

Tags:    

Similar News