மழை நின்ற நிலையிலும் திறக்கப்படாத கடைகள்
- நேற்று முன்தினம் முதல் பெய்த மழை நேற்று இரவுதான் சற்று குறைந்தது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றும் இன்றும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மிச்சாங் புயல் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை புரட்டுப்போட்டுள்ளது. சென்னை, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சி அளிக்கின்றன.
நேற்று முன்தினம் முதல் பெய்த மழை நேற்று இரவுதான் சற்று குறைந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றும் இன்றும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்ற கனமழை காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். கடைகளும் அடைக்கப்பட்டன. இன்று காலை தற்போது சூரியன் சற்று எட்டிப்பார்த்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேங்கிய மழைநீரை பொருட்படுத்தாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வந்த வண்ணம் உள்ளனர். இருந்தபோதிலும், கடைகள் திறக்கப்படாததால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஒன்றிரண்டு டீக்கடைகள் திறக்கப்பட்ட போதிலும், பிஸ்கட் போன்ற எந்த பொருட்களும் இல்லை. போதுமான பால் கையிருப்பு இல்லை என டீ மற்றும் காபியை பார்சலில் கட்டிக் கொடுக்க மறுக்கின்றனர்.
தற்போது பிரதான சாலைகளில் மழை நீர் மெல்லமெல்ல வடிய ஆரம்பித்துள்ளது. ஆனால், உட்புற சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி குளம்போல்தான் காட்சியளிக்கின்றன.