கபாலீசுவரர் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம்- அமைச்சர் தொடங்கி வைத்தார்
- சென்னை கொளத்தூரில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2.11.2021 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
- கபாலீசுவரர் கல்லூரியில் பி.காம் (பொது), பிபிஏ, பிசிஏ, பி.எஸ்.சி (கணினி அறிவியல்) ஆகிய நான்கு பாடப்பிரிவுகளுடன் முதலாமாண்டில் 220 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.
சென்னை:
கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 200 மாணவ-மாணவியர்களுக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.
கடந்த 2021-2022 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் நிர்வாகத்தின் கீழ் சென்னை கொளத்தூரில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2.11.2021 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
இக்கல்லூரியில் பி.காம் (பொது), பிபிஏ, பிசிஏ, பி.எஸ்.சி (கணினி அறிவியல்) ஆகிய நான்கு பாடப்பிரிவுகளுடன் முதலாமாண்டில் 220 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். முதல் பருவத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தற்போது இரண்டாம் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 2022 -2023 கல்வி ஆண்டில் மேற்கூறிய நான்கு பாடப்பிரிவுகளுடன் புதியதாக பி.ஏ. (சைவ சித்தாந்தம்) பாடப்பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது. இக்கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை முடிக்கப்பட்டவுடன் வரும் ஜூலை மாதம் வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. விண்ணப்பங்கள் 5-ந்தேதி வரை அளிக்கப்படுகின்றன.
நிகழ்ச்சியில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் காவேரி, கல்லூரி தலைமை ஆசிரியர் சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.