கிளியனூர் அருகே அய்யனார் கோவில் உண்டியலை உடைக்க முடியாததால் தீ வைத்த மர்ம நபர்கள்: போலீசார் வலைவீச்சு
- கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த உண்டியலுக்குள் தீப்பிடித்து எரிந்து புகை வந்ததை கண்டனர்.
- இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே மொளச்சூரில் புகழ்பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. நேற்று மாலை 5 மணியளவில் இக்கோவில் வளாகத்தில் இருந்து கரும்புகை வெளிவந்தது. அவ்வழியே சென்றவர்கள் இதனைப் பார்த்து கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த உண்டியலுக்குள் தீப்பிடித்து எரிந்து புகை வந்ததை கண்டனர். அவர்கள் ஊர் பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் கிளியனூர் போலீசார், தீயணைப்பு படையினர் கோவிலுக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருட முயற்சித்தது தெரியவந்தது. மேலும், உண்டியலை திறக்க முடியாததால், காகிதத்தில் தீ வைத்து உண்டியலுக்குள் போட்டிருக்கலாம் என போலீசாருக்கு தெரியவந்தது. இதில் உண்டியலுக்குள் இருந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் தீயில் கருகியிருக்கலாம் எனவும், நாணயங்கள் மட்டுமே இருக்க வாய்ப்பிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து இந்து அறநிலையத் துறையின் திண்டிவனம் ஆய்வாளர் தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலுக்குள் தீ வைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.