தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவன் 2 மணி நேரத்தில் மீட்பு
- தந்தை திட்டியதால் மாணவன் வீட்டை விட்டு வெளியேறி எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றி வந்தது தெரியவந்தது.
- மாணவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
போரூர்:
சென்னை, ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த 12 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட மாணவன் தனது நண்பர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டு இரவு 10 மணியளவில் வீடு திரும்பினான். இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மன வேதனை அடைந்த மாணவன் வீட்டை விட்டு வெளியேறினான். பின்னர் அவன் திரும்பி வரவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து குமரன் நகர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்த சிறுவனிடம் ரோந்து பணியில் இருந்த சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் விசாரித்தனர். அப்போது அவன், தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாணவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாயமான 2 மணி நேரத்தில் மாணவனை மீட்ட போலீசாருக்கு மாணவனின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.